புதுச்சேரி

இந்தியகம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்ற காட்சி.

இந்தியகம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம்

Published On 2023-02-21 09:26 GMT   |   Update On 2023-02-21 09:26 GMT
  • புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.
  • 26-ந் தேதி நாடு முழுவதும் கவர்னர் பதவிகளை ரத்துசெய்யக்கோரியும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும்.

புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. காஷ்மீர் முதல் தமிழகம் வரை உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 150 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். ஓட்டல் ஜெயராமில் கூட்டம் நடக்கிறது.

முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு மத்திய பா.ஜனதா அரசை வீழ்த்த இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வியூகம் வகுக்கப்படும்.

கேரள அமைச்சர்கள், பீகார் எம்.எல்.ஏ.க்கள், தேசிய செயலர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். 28-ந் தேதி மாநில கட்சி கட்டுப்பாட்டுக்குழு கூட்டமும் நடக்கிறது. புதுவையில் முதல் முறையாக இந்த கூட்டம் நடக்கிறது. 26-ந் தேதி நாடு முழுவதும் கவர்னர் பதவிகளை ரத்துசெய்யக்கோரியும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, தமிழக மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயலாளர் கானம் ராஜேந்திரன், தெலுங்கானா செயலாளர் நாராயணசாமி, மார்க்சிஸ்டு கட்சி ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், புதுவை எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

புதுவையில் தேர்வு நேரத்தில் ஏழை மக்களின் மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். ரெஸ்டோ பாரை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஜாமீன் வழங்கியுள்ளனர். இதை கண்டித்து மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும்.

என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் முரண்பாடு நிலவுகிறது. பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி மாநில அந்தஸ்துக்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி போராடினால் அவரோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ்பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News