புதுச்சேரி

மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.

வியாபாரிகள் சாலை மறியல்

Published On 2022-11-08 15:12 IST   |   Update On 2022-11-08 15:12:00 IST
  • திருக்கனூர் கடை வீதியில் ஒருபுறம் புதுவை பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடை வீதியும் உள்ளது.
  • அதன் பின்பு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது.

புதுச்சேரி:

திருக்கனூர் கடை வீதியில் ஒருபுறம் புதுவை பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடை வீதியும் உள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியில் தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அதன் பின்பு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது.

புதிதாக அமைக்கப்படும் கழிவு நீர் வாய்க்கால் சித்தலம்பட்டு, தி. புதுக்குப்பம் வழியாக திருமங்கலம் பாதை வரை செல்கிறது. வாய்க்காலில் செல்லக்கூடிய கழிவுநீர் தி.புதுக்குப்பம் பொம்மிரெட்டி குளத்தில் சென்று சேரும் என கூறப்பட்டது.

இதனால் தி.புதுக்குப்பம் கிராம பொதுமக்கள் தங்கள் ஊர் குளத்தில் கழிவுநீர் கலந்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளின் எதிரே ஆளுயர அளவிற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு கம்பிகள் கட்டப்பட்டு கால்வாய் அமைக்காமல் பாதியில் நிறுத்தப்பட்டதால் 3 மாதங்களாக கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரிய பள்ளத்தில் தவறி விழுந்து அடிபட்டதாலும், கடைகளில் வியாபாரம் இன்றியும் கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட சித்தலம்பட்டு கடை வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருக்கனூரில் இருந்து புதுவை செல்லக்கூடிய பஸ் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசாரும் தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் உடனடியாக கால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர் இதனால் திருக்கனூர் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News