புதுச்சேரி

பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அருகில் பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் மற்றும் பலர் உள்ளனர்.

சர்வதேச சுகாதார ஆராய்ச்சி மாநாடு-முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

Published On 2023-01-21 10:40 IST   |   Update On 2023-01-21 10:40:00 IST
  • புதுவை பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் 2-வது சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாடு தொடங்கியது‌.
  • நிகழ்ச்சியில் புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை பிள்ளையார் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் 2-வது சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாடு தொடங்கியது.

இந்த மாநாட்டினை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாமலரை வெளியிட்டு தொடங்கி வைத்தார். ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராஜகோபாலன் முன்னிலை வகித்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக இந்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் டாக்டர் நிட்டின் சேத் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசினார். துணைவேந்தர் பேராசிரியர் சுபாஷ் சந்திர ஹரிதா, சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் நோக்க உரை ஆற்றினார். முன்னதாக மாநாட்டு அமைப்பின் செயலர் பேராசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பல்கலைக்கழக பொது மேலாளர் மற்றும் மாநாட்டின் செயலர் ஆஷா சுரேஷ் பாபு சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியில் புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் இது போன்ற மாநாடு நடத்துவது பெருமையாக உள்ளது. முன்பு மருத்துவ வசதிக்கு ஜிப்மர் அரசு மருத்துவமனையை நாடி வந்த நிலையில் தற்போது ஏராளமான மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் சிறந்த மருத்துவ சேவைக்கும் ஆண்டிற்கு 267 மருத்துவர்களையும் உருவாக்கப்படும் போது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வளவு சிறிய மாநிலத்தில் மருத்துவர்களை உருவாக்கி உலக அளவில் தலைசிறந்த மருத்துவர்கள் ஆக இருந்து வருவது நமது மாநிலத்திற்கு பெருமை ஆகும். மகாத்மா காந்தி மருத்துவமனை சிறந்த மருத்துவர் களை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டு க்குரியதாகும்.

மருத்துவ வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும். புதுவை அரசு மருத்துவத்துறையில் சிறந்த மாநிலமாக உள்ளது. நமது மாநில மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவை வசதி நமது மாநிலத்திலேயே கிடைக்க அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் செயல்பட வேண்டும். தற்போது சிறப்பு மருத்துவ சேவையை இம் மருத்துவமனை செய்து வருவதை பாராட்டுகிறேன் .

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் மாநாட்டின் இணை செயலர் பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

இந்த மாநாடு வருகிற 22-ந் தேதி முடிவடைகிறது. மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. இதில் 50 சர்வதேச வல்லுநர்கள் மற்றும் 250 தேசிய வல்லுனர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சிகள் பற்றி பேசுகின்றனர். மாநாட்டிற்காக 3500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News