புதுச்சேரி

கோப்பு படம்.

டெண்டரை வாபஸ் பெறாவிட்டால் கோர்ட்டு மூலம் தடுத்து நிறுத்துவோம்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் எச்சரிக்கை

Update: 2022-09-29 05:10 GMT
  • புதுவை அரசின் மின்துறை தனது விநியோக கம்பெனியின் 100 சதவீத பங்குகளை ரூ.27 கோடிக்கு தனியாருக்கு விற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரியுள்ளது.
  • தற்போதாவது மின் துறை தனியார் மயமாவதால் புதுவை மக்களுக்கும் மின் ஊழியர்களுக்கும் பொருளாதாரத்திற்கும், சமு தாயத்திற்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று முதல்- அமைச்சர் விளக்குவாரா?

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் மின்துறை தனது விநியோக கம்பெனியின் 100 சதவீத பங்குகளை ரூ.27 கோடிக்கு தனியாருக்கு விற்பதற்கான ஒப்பந்தப் புள்ளியைக் கோரியுள்ளது.இதன் மூலம் அரசின் மின்சாரத்துறை. தனியார் மயமாக அரசு பச்சைக் கொடியை காட்டி இருக்கிறது.

தற்போதாவது மின் துறை தனியார் மயமாவதால் புதுவை மக்களுக்கும் மின் ஊழியர்களுக்கும் பொருளாதாரத்திற்கும், சமு தாயத்திற்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று முதல்- அமைச்சர் விளக்குவாரா?

டெண்டரில், கொடுக்கப்பட்டுள்ள ரூ. 27 கோடி அரசுக்கு கிடைத்து விட்டால் நிதி நெருக்கடி தீர்ந்து விடுமா? டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள ரூ. 27 கோடி எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது? அது விநியோக கம்பெனியின் பங்குகளின் மதிப்பு மட்டுமா அல்லது மின் துறையின் ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பா?

பல ஆயிரம் கோடி மதிப்புள்ளபொது மக்களின் வைப்புத்தொகைக்கு யார் பொறுப்பு? மின் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை யார் உறுதி செய்வது?

மின்துறை ஊழியர்கள் தனியார் மயத்தை எதிர்த்து காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மின் சேவை பராமரிக்கப் படாவிட்டாலோ அல்லது. ஏதாவது அசம்பாவிதம் அல்லது விபரீதம் ஏற்பட்டாலோ அதற்கு அரசு பொறுப்பேற்குமா? சமீபத்தில் மின் துறை லாபம் ஈட்டி வருகிறது என்பது உண்மை. 2017-18- ல் இருந்து 2019-20 வரை 3 ஆண்டுகளில் மின்துறை 49.18 கோடியை லாபமாக ஈட்டி தந்துள்ளது.

இது அரசின் ஒப்பந்த புள்ளியான ரூ.27 கோடியை விட அதிகம். அரசுக்கு வருவாய் ஈட்டும் ஒரு துறையை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டுமா?

மின்துறையை தனியார் மயமாக்குவது தேவையற்றது. அது பொது நலனுக்கு எதிரானது. எனவே அரசு விடுத்துள்ள இந்த டெண்டரை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அப்படி செய்ய தவறினால் நீதிமன்றத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News