கோப்பு படம்
கோவில் அர்ச்சகரிடம் ரூ.4 லட்சம் மோசடி
- புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி.
- கலெக்ஷன் ஏஜெண்டாக ரூபேஷ் குமார் என்பவர் இருந்து வந்தார்.
புதுச்சேரி:
அதிக வட்டி தருவதாக கோவில் அர்ச்சகரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுவை திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. (வயது 56). இவர் குருபாப்பேட்டில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.
இவர் கடந்த ஆண்டு புதுவை காமாட்சியம்மன் கோவில் தெருவில் மரினா கோல்டு மார்ட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தார். அந்த நிறுவனம் முதலீட்டுத் தொகைக்கு வட்டியாக பணமும் அல்லது நகையாகவும் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியதின் பேரில் அந்த பணத்தை பாலாஜி முதலீடு செய்தார். அந்த நிறுவனத்தை கருணாநிதி மற்றும் பங்குதாரராக ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரியும் கணேசனும் நடத்தி வந்தனர். கலெக்ஷன் ஏஜெண்டாக ரூபேஷ் குமார் என்பவர் இருந்து வந்தார்.
தொடக்கத்தில் அந்த நிறுவனம் வட்டி பணத்தை பாலாஜியின் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்தது. அதன் பிறகு வட்டிப்பணத்தை அந்த நிறுவனம் வங்கிக் கணக்கில் செலுத்த வில்லை. ரூ.4 லட்சம் வரை அந்த நிறுவனம் பாலாஜிக்கு கொடுக்க வேண்டி இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த பாலாஜி அந்த நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது அங்கு கடை பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் 3 பேரையும் சந்தித்து பாலாஜி கேட்ட போது மீதி பணத்தை 1 மாதத்தில் கொடுத்து விடுவதாக அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் 1 மாதமாகியும் அவர்கள் பணத்தை கொடுக்க வில்லை. இதையடுத்து பாலாஜி நம்பிக்கை மோசடி செய்து பணத்தை அபகரித்து விட்டதாக கருணாநிதி, கணேசன், மற்றும் ரூபேஷ் குமார் ஆகியோர் மீது புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.