முதலமைச்சர் ரங்கசாமி புதுவை கடற்கரை சாலையில் பழைய துறைமுகத்தில் இடிந்து நின்ற பாலத்தை பார்வையிட்ட காட்சி.
மாண்டஸ் புயலால் மழை தாக்கம்- கடலோர பகுதிகளில் ரங்கசாமி ஆய்வு
- கடந்த 2 நாட்களாக புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது.
- புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
புதுச்சேரி:
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மாண்டஸ் புயலாக உருவெடுத்தது.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது கன மழையுடன் பலத்த காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.
பெரியளவில் மழை பெய்யவில்லை. நேற்று இரவில் காற்றின் வேகம் அதிகரித்தது. புயல் எச்சரிக்கையாக 5-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர், புறநகர் பகுதிகளில் பேனர்கள், கட்அவுட்கள் அகற்றப்பட்டிருந்தது.
இரவு முழுவதும் பலத்த சத்தத்துடன் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. சாலைகள் மரங்களின் இலைகளால் இறைந்து கிடந்தது. பல இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்தது.
புயல் காரணமாக புதுவையில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் வழக்கமான மக்கள் நடமாட்டம் இல்லை. பள்ளி செல்லும் வாகனங்கள், பெற்றோர்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இன்று காலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகளவு இருந்தது. அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழும்பி கரையில் மோதின.
பழைய துறைமுகத்திலிருந்து கடலுக்குள் செல்லும் பழைய பாலம் சில மாதம் முன்பு உடைந்தது. இன்று அலையின் சீற்றம் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்தது.
புயல் கரையை கடக்கும்போது பாலம் தப்பிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று காலை முதல் கடல் அலைகளின் சீற்றத்தை வேடிக்கை பார்க்க புதுவை மக்கள் குவிந்தனர்.
வார இறுதி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அதில் ஒரு சிலர் கடலில் மணல்பரப்பில் இறங்கி அலைகளில் காலை நனைத்து விளையாடினர்.
அப்போது போலீசார் கடலில் இறங்கி விளையாடிய சுற்றுலா பயணிகளை எச்சரித்து வெளியேற்றினர். கடல் அலைகள் கரையை தாக்கும்போது அங்கு நின்று பலரும் செல்பி எடுத்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்தனர். மணல் பரப்பில் இறங்காமல் கடலை பார்த்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் ரங்கசாமி கடலோர பகுதிகளை பார்வையிட்டார். அவர் கடற்கரை சாலைக்கு வந்தார். காரில் இருந்தபடியே கடலின் சீற்றத்தை பார்த்தார். பின்னர் பழைய துறைமுகத்துக்கு வந்து இடிந்து நின்ற பாலத்தை பார்வையிட்டார். அங்கிருந்த போலீசாரிடம், கடல் மணல்பரப்பில் மக்கள் இறங்காமல் தடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து போலீசார் பைக் மூலம் கடற்கரை சாலையில் மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தினர். புதுவையில் குறைந்த அளவிலான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.