புதுச்சேரி

கோப்பு படம்.

மீன்பிடி திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

Published On 2023-03-23 14:43 IST   |   Update On 2023-03-23 14:43:00 IST
  • தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக மீன்பிடி இறங்கு விரிவாக்கம் செய்ய 100 சதவீத மானியத்துடன் நிதியுதவி கோரி கோப்புகள் அனுப்பப்பட்டன.
  • ரூ.2 கோடி வைப்பு தொகையாகவும், நல்லவாடு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.4 கோடியும் வைப்பு தொகையாக வழங்கியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மீன்வளத்துறை தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது: -

முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தலின்பேரில் புதுவை அரசு மீன்வளம், மீனவர் நலத்துறை மூலம் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்திற்கு 2 மீன் இறங்கு நிலையம், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக மீன்பிடி இறங்கு விரிவாக்கம் செய்ய 100 சதவீத மானியத்துடன் நிதியுதவி கோரி கோப்புகள் அனுப்பப்பட்டன.

இதை ஆய்வு செய்த மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அனுப்பிய திட்டத்திற்கு 22.3.2023-ல் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.20.14 கோடியில் பெரியகாலாப்பட்டு பகுதியில் மீன் இறங்கு நிலையம், ரூ.18.94 கோடியில் நல்லவாடு பகுதியில் மீன் இறங்கு மையம், ரூ.53.39 கோடியில் தேங்காய்திட்டு துறைமுகம் (அரிக்கன்மேடு பிரிவு) கட்டுமானம், மீன்பிடி விரிவாக்கம் என மொத்தம் ரூ.92.47 கோடி வழங்கியுள்ளது.

மேலும் பெரிய காலாப்பட்டு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.2 கோடி வைப்பு தொகையாகவும், நல்லவாடு மீன் இறங்கு மைய பராமரிப்பு பணிக்காக ரூ.4 கோடியும் வைப்பு தொகையாக வழங்கியுள்ளது. ஆக மொத்தம் ரூ.100 கோடியே 47 லட்சம் அளவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டங்களை 12 முதல் 18 மாதத்தில் முடிக்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கு அனுமதியளித்த பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபலா, இணை அமைச்சர் முருகன் ஆகியோருக்கு நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News