கோப்பு படம்.
அரசு துறைகளுக்கு 15 சட்ட ஆலோசகர்கள் நியமனம்-அமைச்சர் லட்சுமிநாராயணன்
- அனைத்து அரசு துறைகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
- 15 சட்ட உதவியாளர்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்விநேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
அசோக்பாபு(பா.ஜனதா):- அனைத்து அரசு துறைகளிலும் குறைந்தபட்சம் ஒரு சட்ட ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் லட்சுமிநாராயணன்:- ஏற்கனவே அரசு துறைகளில் 9 சட்ட அதிகாரிகள் உள்ளனர். மேலும் 15 சட்ட உதவியாளர்களை 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அசோக்பாபு:- அரசு துறைகளில் வழக்குகள் அதிகமாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு துறைக்கும் தனியாக சட்ட ஆலோசகர் தேவைப் படுகிறது. இதை நேர்முக தேர்வு மூலம் வக்கீலை தேர்வு செய்வது சரியான நடைமுறையல்ல.
லட்சுமிநாராயணன்:- ஐகோர்ட்டு சட்ட அதிகாரிகளை தேர்வு செய்ய சில விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதன்படி தான் நேர்முகத்தேர்வு நடத்துகிறோம். இருப்பினும் முதல்-அமைச்சருடன் கலந்துபேசி தளர்வுகளை ஏற்படுத்தலாம்.
நேரு:- அரசு சொத்துக்களை சிலர் அபகரித்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடவடி க்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. விரைவாக சட்ட ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.
அசோக்பாபு:- ஆட்சி அமைந்து 15 மாதம் ஆகிவிட்டது. இன்னும் அரசு வக்கீல், அரசு பிளீடர் நியமிக்கவில்லை. கடந்த ஆட்சியில் உள்ளவர்களே தொடர்கின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வக்கீல்களை மாற்றுவதுதான் வழக்கம். எனவே உடனடியாக புதிய வக்கீல்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.