மூதாட்டி பழனியம்மாள்
வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு
- அரியாங்குப்பத்தில் வீட்டில் தனியாக வசித்த போலீஸ் ஏட்டுவின் தாயாரி டம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.
- இதில் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டதால் மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் வீட்டில் தனியாக வசித்த போலீஸ் ஏட்டுவின் தாயாரி டம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். இதில் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டதால் மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.கே.நகர். கம்பன் வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பழனியம்மாள் (வயது75). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் பன்னீர்செல்வம் (55), ரவி (51) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 4 பேருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
ரவி புதுவை காவல் துறையில் ஸ்பெஷல் பிராஞ்சு பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோபால் இறந்து விட்டதால் பழனியம்மாள் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவ்வப்போது அவரது மகன்கள் மற்றும் மகள்கள் பார்த்து விட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். பழனியம்மாள் எப்போது தனது கழுத்தில் 4 பவுன் செயினும், கைகளில் 4 பவுன் வளையலும் அணிந்திருப்பார்.
இந்த நிலையில் நேற்று இரவு பழனியம்மாள் சாப்பிட்டு விட்டு வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டாமல் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தனர். பழனியம்மாள் அதனை தடுக்க முயன்ற போது கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. ஆனாலும் மர்மநபர்கள் பழனியம்மாளிடமிருந்து செயினையும், கையில் அணிந்திருந்த தங்க வளையல்களையும் பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றி பழனியம்மாள் அருகில் வசிக்கும் தனது மகன் ரவிக்கு போன் செய்தார். ஆனால் கழுத்தில் படுகாயமடைந்ததால் அவரால் சரியாக பேசமுடியவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அறிந்த ரவி உடனே தனது தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு தாய் பழனியம்மாள் கழுத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் உடனடியாக அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து அனுமதித்தார். பழனியம்மாளுக்கு மூச்சு குழாயில் படுகாயம் ஏற்பட்டதால் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ரவி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர் களை வரவழைத்தனர். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். போலீஸ்காரரின் வீட்டில் மர்ம நபர்கள் துணிகரமாக புகுந்து அவரது தாயாரை தாக்கி நகை பறித்து சென்ற சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.