புதுச்சேரி

சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் சாலையை படத்தில் காணலாம்.

சேரும் சகதியுமான சாலை

Published On 2022-10-15 13:30 IST   |   Update On 2022-10-15 13:30:00 IST
  • திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகன் கோவில் வீதியில் பிரதான சாலை உள்ளது.
  • மழைக்காலங்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்குவதால் முற்றிலுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது வருகிறது.

புதுச்சேரி:

திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகன் கோவில் வீதியில் பிரதான சாலை உள்ளது.

சுமார் 700 குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த சாலை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பழைய நீதிமன்றத்தில் இருந்து இரும்பை செல்லும் பைபாஸ் சாலைக்குச் செல்லும் குறுக்கு வழியாகவும் உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்குவதால் முற்றிலுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது வருகிறது. இதுகுறித்து முருகன் கோவில் வீதி மக்கள் திருச்சிற்றம்பலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாலையை அமைக்க கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் இந்த அடிப்படை பிரச்சினையை கருத்தில் கொண்டு திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்றம் சார்பில் மண் கொட்டி சாலை சமன் செய்யப்பட்டது. ஆனால் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இங்கு சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது அந்த மண் கொட்டப்பட்ட சாலை சேரும் சகதியுமாக மாறி வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளி வாகனங்களில் சென்று வருவது வழக்கமாக இருந்த நிலையில் இந்த சாலை தற்போது சேரும் சகதியுமாக மாறிய நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளே வர மறுத்துவிட்டனர்.

மாணவர்கள் சேற்றில் நடந்து பல தூரம் சென்று பள்ளி வாகனங்களில் ஏறி பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் அங்கு குளம் போல் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஷக்காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரதான சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியும் ஆகவும் இருக்கும் நிலையில் அடுத்து வரும் வடகிழக்கு பருவமழையில் முற்றிலும் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலோ, வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாகவோ போர்க்கால அடிப்படையில் சாலையை மேம்படுத்தி இப்பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News