வழிபாடு
வெள்ளிங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

நாளை மகா சிவராத்திரி: 2 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

Published On 2022-02-28 09:42 IST   |   Update On 2022-02-28 09:42:00 IST
2 ஆண்டுகளுக்கு பிறகு மலையேற அனுமதி கிடைத்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மலையேறுவதற்கு அனுமதி என தகவல் அறிந்ததும் கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவைக்கு வந்தனர்.

அவர்கள் கோவையில் இருந்து பஸ் மூலம் பூண்டி மலையடிவார பகுதிக்கு பயணித்தனர். அங்கிருந்து அவர்கள், வெள்ளிங்கிரி மலையேறினர்.

மலையேறுவதற்கு முன்பு பக்தர்கள் அனைவரும் வனத்துறை சோதனை சாவடியில் தடுத்து நிறத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து வனத்திற்குள் செல்வதால், பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் வைத்துள்ளனரா? என அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்தனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தவர்களிடம் அதனை பறிமுதல் செய்து விட்டு மலையேறுவதற்கு அனுமதித்தனர். மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் கூட்டமாக செல்ல வேண்டும். யாரும் தனியாக செல்ல வேண்டாம். மிகுந்த கவனத்தோடு சென்று திரும்ப வேண்டும் என்றும், குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது என்றும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு மலையேற அனுமதி கிடைத்துள்ளதால் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Similar News