வழிபாடு
மாசித்திருவிழாவில் 11-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்ற காட்சி.

திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா இன்றுடன் நிறைவு

Published On 2022-02-18 10:13 IST   |   Update On 2022-02-18 10:13:00 IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று இரவு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் 4 ரதவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திரு விழாவான நேற்று முன்தினம் நடைபெற்றது. 11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு தெப்பக்குளம் அருகில் உள்ள நெல்லை நகரத்தார் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று சுவாமி அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

12-ம் திருவிழா நிறைவு நாளான இன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து 12-ம் திருவிழா மண்டபம் சேர்கின்றனர்.

பின்னர் இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பொறுப்பு குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Similar News