வழிபாடு
சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடந்தபோது எடுத்தபடம்.

ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம்

Published On 2022-02-17 09:06 IST   |   Update On 2022-02-17 09:06:00 IST
ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடந்தது. கோவிலின் நான்கு மாடவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் உலா வந்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் தென்கயிலாயமாக திகழ்கிறது. கோவிலில் மாசி மாத பவுர்ணமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் திரிசூல ஸ்நானம் நடப்பது வழக்கம்.

அதன்படி மாசி மாச பவுர்ணமியான நேற்று திரிசூல ஸ்நானம் நடந்தது. முன்னதாக பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், ஞானப்பிரசுனாம்பிகை, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் திரிசூலத்தை அலங்கார மண்டபத்தில் இருந்து மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு அருகில் கொண்டு சென்றனர்.

அங்கு திரிசூலம், கலசத்துக்கு கணபதி பூஜை, புண்ணியாவதனம், பல வண்ண மலர்களால் பூஜை நடந்தது. அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களிடையே சொர்ணமுகி ஆற்றின் புராண தகவல்களை வேதப் பண்டிதர்கள் விளக்கி கூறினர்.

அதைத்தொடர்ந்து திரிசூலத்தை சொர்ணமுகி ஆற்றுக்கு கொண்டு சென்று புனிதநீரில் மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். பின்னர் திரிசூலத்துக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து, அகண்ட தீபாராதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர் மற்றும் கோவில் அதிகாரிகள் பங்கேற்று சாமி தரிசனம் ெசய்தனர்.

அதன் பிறகு சொர்ணமுகி ஆற்றில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், சப்பரங்களில் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனியாக எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Similar News