செய்திகள்
கோப்புப்படம்

இந்துசமய அறநிலைய கோவில்களில் ஆடி அமாவாசை, ஆடிபூரம் நாட்களில் வழிபாட்டுக்கு தடை

Published On 2021-08-07 11:55 IST   |   Update On 2021-08-07 16:20:00 IST
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது கொரோனா 2-வது அலை தணிந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 23-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கொரோனா 3-வது அலை அச்சுறுத்தலும் நிலவியபடி இருக்கிறது. 3-வது அலையை எதிர்கொள்ள 13 பேர் கொண்ட செயல் திட்டக்குழுவை
தமிழக அரசு
அமைத்து உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய சந்தைகள், தெருக்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று காலையில் அமலுக்கு வந்தது. நிறைய பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்ல முடியாததால் வெளியில் வாசலில் நின்று வழிபட்டு சென்றனர்.


இந்தநிலையில் நாளை ஆடி அமாவாசைக்கான வழிபாடுகள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. கடலோர பகுதிகளிலும், ஆலயங்கள் அருகில் உள்ள நீர்நிலை பகுதிகளிலும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பெரிய அளவில் நடைபெறும்.

இதேபோன்று வருகிற 11-ந் தேதி ஆடிப்பூரம் வருகிறது. அன்றைய தினம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் திரள வாய்ப்பு உள்ளது.

கொரோனா பரவல் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பூரம் நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அதிக அளவில் திரள்வதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் இரு நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை மற்றும் 11-ந் தேதி (புதன்கிழமை) ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), ஆடி அமாவாசை மற்றும் 11-ந் தேதி (புதன்கிழமை) ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.


Similar News