செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் இன்று தொடங்கியது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது

Published On 2020-01-01 10:47 IST   |   Update On 2020-01-01 16:24:00 IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்தார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்தார்.

இதையொட்டி கோவிலில் உள்ள நடராஜர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து 2-ந் தேதி சந்திர பிரபை வாகனத்தில் வீதிஉலா, 3-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 4-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, 5-ந் தேதி வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் தெருவடைச் சான் வீதி உலாவும் நடக்கிறது.

6-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 7-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், 8-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ் கந்தர் வெட்டுக் குதிரையில் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 9-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.

10-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 10-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

உற்சவ விழா நடைபெறும் 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாய ரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்க வாசகரை எழுந்தருள செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

Similar News