செய்திகள்
இடமாற்றம் செய்யப்பட்ட மகாலட்சுமி தீர்த்தத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

ராமேசுவரம் கோவிலில் இன்று மகாலட்சுமி தீர்த்தம் இடமாற்றம்

Published On 2018-12-14 10:50 IST   |   Update On 2018-12-14 11:36:00 IST
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள மகாலட்சுமி தீர்த்தம் இடமாற்றம் செய்யப்பட்டு யாகபூஜை நடந்து இன்று பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அக்னி தீர்த்த கடலில் முன் னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் மகாலட்சுமி, காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் ஆகிய தீர்த்தங்கள் பக்தர்களுக்கு இடையூறாக இருந்தது.

இந்த தீர்த்தங்களை கோவில் வளாகத்திலேயே வேறு இடத்தில் அமைக்கக் கோரி மதுரை ஐகோர்ட் டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட்டு தீர்த்த கிணறுகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.

அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி தீர்த்த கிணற்றை தவிர மற்ற 5 கிணறுகளும் வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மகாலட்சுமி தீர்த்த கிணறை மாற்றக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோவில் நிர்வாகம் அதனை மாற்ற முன்வரவில்லை. இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் 10 நாட்களுக்குள் மகாலட்சுமி தீர்த்த கிணற்றை மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து தீர்த்த கிணற்றை மாற்றும் பணியை கோவில் நிர்வாகம் முடுக்கி விட்டது. அதன்படி கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள யானைகட்டு இடம் அருகில் மகாலட்சுமி தீர்த்த கிணறு அமைக்கப்பட்டது.

இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் நேற்று கோவில் மண்டபத்தில் முதல்கால யாகபூஜை நடத்தப்பட்டது. இன்று காலை 2-ம் கால பூஜை நடந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் புனித நீராடினர்.
Tags:    

Similar News