செய்திகள்

மாசி பிரம்மோற்சவ விழா: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2018-02-26 08:41 GMT   |   Update On 2018-02-26 08:41 GMT
திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது.
திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில். அப்பர்.சுந்தரர். சம்பந்தர் ஆகியோர்களால் பாடப்பட்டது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில்ஆண்டு தோறும் மாசி பிரமோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது. சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அ.தி.மு.க. பிரமுகர் கே.கார்த்தி மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் வடிவுடையம்மன் கோவில் முன்பு சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது. தேரின் முன்னால் 108 சங்கநாதம் முழங்க பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர், மோர், பழங்கள் வழங்கப்பட்டது. பல வீடுகளில் குடும்பமாக வந்து ஆரத்தி எடுத்தனர் தொடர்ந்து தேர் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வந்து தெற்குமாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வந்து சன்னதி தெருவுக்கு வந்து நிலையை வந்தடைந்தது.

Tags:    

Similar News