செய்திகள்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2017-12-29 08:33 IST   |   Update On 2017-12-29 08:33:00 IST
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 11 டன் பலவண்ண மலர்களால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி கோவிலில் உள்ள தங்கக் கொடி மரம், பலி பீடம், ரெங்கநாயக்கர் மண்டபம், வெள்ளிக்கதவுகள், சொர்க்க வாசல், வகுளமாதாதேவி சன்னதி, யோக நரசிம்மசாமி சன்னதி, வரதராஜசாமி சன்னதி ஆகியவை உள்பட பல்வேறு இடங்களில் 6 டன் மலர்களாலும், பல்வேறு பழங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோவிலுக்கு வெளியே ராஜகோபுரம், நான்கு மாடவீதிகள், பேடி ஆஞ்சநேயர் கோவில், வராகசாமி கோவில் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர திருமலையில் உள்ள ஜி.என்.சி.டோல் கேட்டில் இருந்து கோவிலின் பிரதான நுழைவு வாயில் வரை 5 டன் மலர்களால் சிறப்பு அலங்கார வளைவுகள், தோரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த வெங்கடேஷ், தனசேகர், ரெங்காச்சாரி ஆகிய பக்தர்கள் ரூ.10 லட்சம் செலவில் 5 டன் எடையிலான பல வண்ணமலர்கள், பழங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர். தர்மராஜ் என்ற பக்தர் ரூ.10 லட்சம் செலவில் கொய் மலர்களை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் சேலம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சந்திரசேகர், நாகப்பன் மற்றும் பக்த சபா அறக்கட்டளைதாரர் 6 டன் மலர்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர். ஆக மொத்தம் 11 டன் மலர்களால் கோவில் மற்றும் திருமலை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக நேற்று காலை 8 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நாராயணகிரி பூங்கா வரையிலும் பக்தர்கள் காத்திருந்தனர்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர கொட்டகைகளில் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாராயணகிரி பூங்காவில் மரங்களுக்கு கீழே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக தரையில் அமர்ந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னதானம், குடிநீர் ஆகியவை வழங்கப்படுகிறது.

நேற்று காலை 9 மணியில் இருந்து இரவு 7 மணிவரை மொத்தம் 52 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 10 மணிநேரமும், மலைப்பாதைகள் வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு 3 மணிநேரமும், 300 ரூபாய் டிக்கெட் பக்தர்களுக்கு 4 மணிநேரமும் ஆனது. நேற்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடி கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News