செய்திகள்
கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்.

ஆடி 18 விழா: கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்ட பக்தர்கள்

Published On 2017-08-03 11:25 IST   |   Update On 2017-08-03 11:25:00 IST
ஆடி 18 விழாவையொட்டி கொடுமுடியில் பக்தர்கள் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாளை வழிபட்டனர்.
ஆடி 18 விழாவையொட்டி கொடுமுடியில் பக்தர்கள் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாளை வழிபட்டனர்.

இதையொட்டி காலை 4 மணிக்கு மகுடேஸ்வரர் கோவிலில் நடை திறக்கப்பட்டது. மகுடேஸ்வரர் நாகாபரணம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோவில் மூத்த சிவாச்சாரியார் தண் டபாணி குருக்கள் தலைமையில் பிரபு குருக்கள், பாபு குருக்கள், அய்யப்ப குருக்கள், மகேஷ் குருக்கள், பட்டாச்சாரியார்கள் ஸ்ரீதரபட்டர், சவுந்தர்ராஜன்பட்டர் ஆகியோர் அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.

ஆடி 18 விழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி முதலே வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கொடு முடிக்கு வர ஆரம்பித்தனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது.

பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று மகுடேஸ்வரர் வீர நாராயண பெருமாளை வழிபட்டனர். பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமியை தரிசிக்க கம்புகளால் தடுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

ஆடி 18 விழாவையொட்டி கோவிலிலும், காவிரி ஆற்றங்கரையிலும் திரளான பக்தர்கள் திரண்டிருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

அவர்கள் மகுடேஸ்வரர் கோவில் வளாகத்திலும், காவிரி ஆற்றங்கரையிலும் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News