செய்திகள்

மீடியாக்கள், சமூக வலைதளங்கள், ரசிகர்களின் வாயை அடைத்த வெற்றி: பாகிஸ்தான் பயிற்சியாளர்

Published On 2019-06-24 13:12 GMT   |   Update On 2019-06-24 13:12 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெற்ற வெற்றி மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்களின் வாயை அடைக்கும் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவிதுள்ளார்.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பான வகையில் ஆட்டத்தை தொடங்கவில்லை. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக படுதோல்வியடைந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்தது. ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழும்பியது.

இந்நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றி விமர்சனங்கள் செய்த வாயை அடைக்கும் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘போட்டியின் தொடக்கத்தில் தோல்வியடைந்து அதன்பின் சிறப்பாக பாகிஸ்தான் விளையாடுகிறது என்பதை ஏற்க முடியாது. நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம்.



நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இந்த கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காகத்தான் ஒவ்வொரு நாளும் கடுமையாக பயிற்சி எடுக்கிறோம்.

கடந்த வாரம் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்கள். குறிப்பாக மீடியாக்கள், சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்களால் நம்பமுடியாத அளவிற்கு காயப்படுத்தப்பட்டார்கள். இந்த போட்டியின் மூலம் சரியான எதிர்வினை ஆற்றியுள்ளோம். இந்த வெற்றி அவர்களின் வாயை அடைக்கும் என நம்புகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News