ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
- வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
- இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை, ஊழல் செய்தது உள்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்டில் அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கான தண்டனை விவரம் இன்று வெளியிட உள்ளதாக அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இதையொட்டி வங்கதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.