உலகம்

தூதரகங்களில் விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் - உக்ரைன் அரசு அதிர்ச்சி

Published On 2022-12-03 20:01 GMT   |   Update On 2022-12-03 20:01 GMT
  • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்துள்ளது.
  • உக்ரைன் நாட்டின் தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.

கீவ்:

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல உக்ரைன் நாட்டின் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று முன்தினம் விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் கிடைத்தது. ஆனால் அதில் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை. இதையடுத்து மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்தை போலீசார் சுற்றி வளைத்தனர், மோப்ப நாய்களுடன் அந்த பகுதியை தேட ஆரம்பித்தனர்.

இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ கூறுகையில், ஒரு வினோத திரவத்தில் ஊற வைக்கப்பட்ட பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேபிள்ஸ் மற்றும் கிராகோவில் உள்ள பொது தூதரகங்களுக்கும், ப்ர்னோவில் உள்ள தூதரகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை பலத்த பாதுகாப்புடன் இருக்க உக்ரைன் வெளியுறவு மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News