உலகம்

ரிஷி சுனக்

இங்கிலாந்து நிதித்துறை, சுகாதாரத்துறை மந்திரிகள் திடீர் ராஜினாமா

Published On 2022-07-05 19:39 GMT   |   Update On 2022-07-05 19:39 GMT
  • இங்கிலாந்தின் நிதித்துறை மந்திரி ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • இதேபோல், இங்கிலாந்தின் சுகாதாரத்துறை மந்திரியான சஜித் ஜாவிதும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லண்டன்:

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.

இதற்கிடையே, கிறிஸ் கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை எனக்கூறி அவர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இச்சம்பவம் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயணமூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News