உலகம்

சீனாவின் உளவு கப்பலுக்கு இலங்கை அரசு நிபந்தனை

Published On 2022-08-14 09:14 GMT   |   Update On 2022-08-14 09:14 GMT
  • இலங்கையை நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்ட சீன கப்பல்.
  • சீன உளவு கப்பல், ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்குள் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது.

கொழும்பு:

சீன ராணுவத்தின் உளவு கப்பலான 'யுவான் வாங்' கடந்த 11-ந் தேதி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து சீன கப்பலின் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. இதற்கு சீனா தனது அதிருப்தியை தெரிவித்தது.

இதற்கிடையே இலங்கையை நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்ட சீன கப்பல், இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.

ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு கிழக்காக 600 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. துறைமுகத்துக்குள் நுழைய அனுமதிக்காததால் காத்திருந்தது. இது தொடர்பாக இலங்கையுடன் சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சீன உளவு கப்பல், ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்குள் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதன்படி அக்கப்பல், வருகிற 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்.

சீன கப்பல், எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றுக்காக வருவதாக தெரிவிக்கப் பட்டாலும் அக்கப்பலில் செயற்கை கோல் கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி பணி உள்ளிட்ட அதிநவீன வசதிகள் உள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய கவலை தெரிவித்தது.

இந்த நிலையில் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வர உள்ள சீன உளவு கப்பலுக்கு இலங்கை அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது. சீன கப்பல், துறைமுகத்துக்கு வரும் போது சில நிபந்தனைகள் விதிக்கும்படி இலங்கை பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கை பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் கப்பல் இருக்கும்போது அதன் தானியங்கி அடையாள அமைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கை கடல் பகுதிக்குள் எந்தவித அறிவியல் ஆராய்ச்சி பணிகளும் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News