வீடு இல்லாததால் நான் எங்கே செல்வேன்- ரணில் விக்கிரமசிங்கே ஆவேசம்
- இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டை ஆட்டம் காண செய்து உள்ளது.
- என்னை சிலர் வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டை ஆட்டம் காண செய்து உள்ளது. உணவு பொருட்கள் மற்றும் எரி பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த 9-ந்தேதி போராட்டக்காரர்கள் அதிபர் மற்றும் பிரதமர் இல்லத்தை சேதப்படுத்தியதுடன் தீ வைத்தும் கொளுத்தினார்கள். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு ஓட்டம் பிடித்தார். தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கையை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆனாலும் அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு செல்லும் வரை போராடபோவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கண்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னை சிலர் வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ளனர்.
அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் போராட்டம் எதிலும் ஈடுபடவேண்டாம். ஏனென்றால் எனக்கு செல்ல வீடு எதுவும் இல்லை.
என்னை வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறி ஏன் போராட்டம் நடத்தி நேரத்தை வீணடிக்கிறீர்கள். முதலில் போராட்டக்காரர்கள் எரிக்கப்பட்ட எனது வீட்டை மீண்டும் சீரமைத்து தர முயற்சி செய்ய வேண்டும். வீடு எதுவும் இல்லாத என்னை வீட்டுக்கு செல்லும் படி கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் வீட்டை சீரமைக்கட்டும் அல்லது நாட்டை சீரமைக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.
இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து செயல் பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.