உலகம்

நிதி நெருக்கடி எதிரொலி: அமைச்சர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்த பாகிஸ்தான் அரசு

Published On 2023-02-25 06:52 GMT   |   Update On 2023-02-25 06:52 GMT
  • நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சிக்கனமும், தியாகமும், எளிமையும் நமக்கு தேவை.

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 350 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான் அதன் மதிப்பீட்டின்படி வெறும் 3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்புடன், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது.

இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு நடவடிக்கையாக, பாகிஸ்தானில் அமைச்சர்கள் இனி பிசினஸ் கிளாஸில் பயணிக்கக்கூடாது என்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்து தடை விதித்துள்ளது.

நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சிக்கனமும், தியாகமும், எளிமையும் தங்களுக்கு தேவை என அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறியதாவது:-

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அடுத்த பட்ஜெட்டில் அரசாங்கம் மேலும் சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றும். இது காலத்தின் தேவை. காலம் நம்மிடம் இருந்து என்ன கோருகிறது என்பதை நாம் செயலில் காட்ட வேண்டும். அதுதான் சிக்கனம், எளிமை மற்றும் தியாகம்

நாட்டில் 764 மில்லியன் டாலர் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர்களும் தானாக முன்வந்து பங்களிக்கின்றனர். உயர் அதிகாரிகள் தவிர பல மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் தங்கள் சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட முன்வந்துள்ளனர்.

செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு வரை ஆடம்பர பொருட்கள் மற்றும் கார்களை வாங்குவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News