உலகம்

தமிழகத்தின் வாசல் வரை வந்துவிட்டது- சீன உளவு கப்பலால் உச்சக்கட்ட அபாயம்

Published On 2022-08-14 09:58 GMT   |   Update On 2022-08-14 09:58 GMT
  • தமிழகத்தின் வாசல் கதவு வரை அந்த உளவு கப்பல் வரப்போகிறது.
  • இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர்.

இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு அந்த நாட்டு மக்கள் பட்டினியும், பசியுமாக கிடந்தபோது அய்யோ பாவம் என்று இந்தியா எல்லா அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்தது.

பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமையை வாரி வாரி வழங்கியது. அனைத்தையும் வாங்கி தின்றுவிட்டு இன்று இந்தியாவை பாதுகாப்பு விஷயத்தில் அலறவிட்டு அல்லாட வைத்திருக்கிறது இலங்கை அரசு.

பொதுவாகவே சிங்களத் தலைவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்பது கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் பல தடவை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மீண்டும் இந்தியாவுக்கு துரோகம் செய்யும் ஒரு செயலை சிங்கள தலைவர்கள் நிகழ்த்தி காட்டி உள்ளனர்.

அவர்கள் துரோகத்தால் சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.

நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த யுவான் வாங்-5 கப்பல் கடந்த 11-ந் தேதியே இலங்கைக்கு வருவதாக இருந்தது. இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும், கப்பலின் வருகையை காலவரையின்றி ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது.

ஆனால் சீனா அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருப்பதால் நாங்கள் வருவதை தடுக்க இயலாது என்று சீனா அதிகாரத்துடன் பதில் அளித்தது.

இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக யுவான் வாங்-5 உளவு கப்பல் நாளை மறுநாள் ஹம்பாத்தோட்டை துறைமுகத்துக்கு வந்துவிடும். 22-ந் தேதி வரை அது அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த 7 நாட்களில் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் சீனா இதையெல்லாம் நிச்சயம் மதிக்காது. நிச்சயமாக அது உளவு தகவல்களை சேகரிக்கும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் அழுத்தத்தையும் மீறி சீனாவுக்கு ஆதரவாக இலங்கை எடுத்திருக்கும் முடிவு வரலாற்று பிழையாகக் கருதப்படுகிறது. இந்த மாத இறுதியில் சர்வதேச நிதி ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆணையத்திடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்க இலங்கை தீவிரமாக உள்ளது. இதற்கு சீனா உதவ உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை நம்பித்தான் சீனா பக்கம் இலங்கை சாய்ந்திருக்கிறது.

தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் 600 கடல் மைல் தொலைவில் இருக்கும் யுவான் வாங்-5 உளவு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் வந்ததும் தனது வேலையை ஆரம்பித்துவிடும். தமிழகத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது.

ஆனால் யுவான் வாங்-5 உளவு கப்பல் மூலம் 750 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. விண்வெளி ஆய்வுக்கு மட்டுமே இந்த கப்பல் பயன்படுத்தப்படும் என்று பொதுவாக சீனா சொல்லிக் கொள்கிறது.

ஆனால் முழுக்க முழுக்க உளவு பார்க்கும் வேலையைத் தான் இந்த கப்பல் செய்கிறது. இதே போன்று 7 உளவு கப்பல்களை சீனா வைத்திருக்கிறது. அந்த நாட்டிடம் உள்ள மிகப் பெரிய உளவு கப்பல் இந்த யுவான் வாங்-5 கப்பல் தான்.

இதனால்தான் இந்த கப்பலை நினைத்து இந்திய ராணுவம் அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்தியாவில் எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தின் வாசல் கதவு வரை அந்த உளவு கப்பல் வரப்போகிறது.

இந்த உளவு கப்பலால் இந்தியாவில் மேற்கொள்ளப் படும் ஏவுகணை பரிசோதனைகளை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். அந்த ஏவுகணைகள் எத்தகைய வலிமையுடன் இருக்கின்றன என்பதையும் கூட இந்த உளவு கப்பலால் மோப்பம் பிடித்துவிட முடியும்.

அது மட்டுமல்ல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்ற விவரத்தையும் கூட இந்த உளவு கப்பலால் அறிந்துகொள்ளும் திறன் இருக்கிறது. ராணுவ ரீதியிலான பல ரகசிய நடவடிக்கைகளையும் இந்த உளவு கப்பல் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் 7 நாட்களும் அந்த கப்பல் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை அப்படியே கபளீகரம் செய்யும் வகையில் ஸ்கேன் செய்யும் என்று ராணுவ உயர் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

குறிப்பாக இந்தியா தனது செயற்கைகோள் கட்டுப் பாடுகளை எப்படி மேற்கொள்கிறது என்பதை யும் அந்த கப்பல் தெரிந்துகொள்ளும். தென் இந்தியாவில் 6 முக்கிய கடற்படை தளங்கள் இருக்கின்றன. அந்த 6 இடங்களிலும் என்ன நடக்கிறது என்பதை உளவு கப்பலால் கண்காணிக்க முடியும்.

தென் இந்தியாவின் கடற்படை தலைமை அலுவலகம் கொச்சியில் இருக்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதையும் துல்லியமாக இந்த உளவு கப்பலால் பார்க்க முடியும். இதனால்தான் இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்த லாக கருதப்படுகிறது.

கடந்த மாதம் 14-ந் தேதி சீனாவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் இடையில் வேறு எந்த துறைமுகத்துக்கும் செல்லவில்லை. எனவே எரிபொருள் நிரப்பவும், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளவும் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் எரிபொருள் நிரப்புவதற்கு 2 நாட்கள் போதுமானவை.அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எதிர் காலத்தில் நிரந்தரமாக ராணுவ முகாம் அமைக்கப் படும்போது அங்கு இந்த கப்பல் எப்படி செயல்பட முடியும் என்பதை ஒத்திகை பார்க்கவே தற்போது 7 நாட்கள் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதியும் இந்த கப்பலில் இருக்கிறது.

விண்வெளி மற்றும் செயற்கை கோள்களை க ண்காணிப்பதற்கான தொழில்நுட்பத்தை அதிக அளவில் வைத்திருக்கும் இந்த கப்பல் மிக மிக எளிதாக கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும் இருக்கும் அணுமின் நிலையங்களை அணு அணுவாக ஆய்வு செய்துவிடும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய தகவல்களை திருட முடியும். ஒடிசா கடற் கரை வரை இந்த கப்பலால் ஊடுருவி பார்க்க முடியும். இந்த உளவு கப்பலுக்கு சீனாவின் ராணுவ புலனாய்வு துறையோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.

எனவே இந்த உளவு கப்பல் சேகரிக்கும் தகவல்கள் அனைத்துமே சீனாவின் ராணுவ புலனாய்வு அமைப்புக்கு அடுத்த நிமிடமே சென்று சேர்ந்துவிடும். இதுதான் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று இந்தியா உறுதியாக கருதுகிறது.

மேலும் சீன ராணுவம் தலைநகர் பீஜிங்கில் பல இடங்களில் ராணுவ கண்காணிப்பு நிலையங்களை அமைத்திருக்கிறது. அந்த கண்காணிப்பு மையங்களுக்கு இந்த உளவு கப்பலில் இருந்து எளிதாக தகவல்களை அனுப்ப முடியுமாம். இந்தியாவின் சைபர், மின்னணு தகவல்கள் அனைத்தையும் இந்த உளவு கப்பலால் எளிதாக அள்ளி விட முடியும்.

இந்திய பெருங்கடலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த கப்பல் அடித்தளம் அமைக்கும் வகையில் செயல்பட போகிறது. அடுத்தமாதம் (செப்டம்பர்) வரை இந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில்தான் முகாமிட்டு நிற்கப்போகிறது.

சக்திவாய்ந்த இந்த கண்காணிப்பு கப்பலில் இருந்து இந்திய பெருங்கட லின் பெரும் பகுதி அதனுடைய ஆதிக்கத்தில்தான் இருக்கும். இலங்கை சிங்கள தலைவர்கள் அளவுக்கு மீறி கடன் வாங்கிவிட்டு வட்டி கொடுக்க முடியாமல் சீனாவிடம் அடிபணிய நேரிட்டதால் இந்த ஆபத்து நம்மை நெருங்கி இருக்கிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் அமைந்த சிறப்பான துறைமுகமாகும். கிழக்கு ஆசிய நாடுகளையும், மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் இணைக்கும் மையமாக இதுஉள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இந்தியாவை இலக்காக கொண்டு அடுத்தடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் தனது வேலையை காட்டப் போகிறது.

அதற்கு இந்த யுவான் வாங்-5 உளவு கப்பல் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

Similar News