உலகம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீண்டும் ஆளுங்கட்சி தலைவராக தேர்வு

Published On 2023-12-16 05:05 GMT   |   Update On 2023-12-16 05:05 GMT
  • இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது.
  • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.

கொழும்பு:

இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நெருக்கடிக்கு அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தான் காரணம். அவர்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டம் நடந்தது.

இந்த போரட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கோத்தபய ராஜபக்சேவும், மகிந்த ராஜபக்சேவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டது.

இலங்கையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியதால் வெளிநாட்டில் இருந்த கோத்தபய ராஜபக்சே சொந்த நாடு திரும்பினார்.

ஆனாலும் சில காலம் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 78 வயதான மகிந்த ராஜபக்சே கட்சியின் தலைவராக தேர்வு செய்யபப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாநாட்டில் மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக நியாயமற்ற முறையில் நாங்கள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளோம். விடுதலை புலிகளுடனான போரில் ஈடுபட்ட போது தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்வதை உறுதிபடுத்தினோம். நம்மை அவதூறு செய்து கேலி செய்பவர்கள் அதை தொடரட்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலின் போது நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News