உலகம்

சீன உளவுக் கப்பல் இலங்கை வந்தது- அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1 வாரம் நிற்கும்

Published On 2022-08-16 05:33 GMT   |   Update On 2022-08-16 05:33 GMT
  • எரிபொருள் நிரப்பவும், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளவும் உளவு கப்பல் கடந்த 11-ந் தேதி இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரத் திட்டமிட்டு இருந்தது.
  • உளவு கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தால் தென் இந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

கொழும்பு:

சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள் இருக்கின்றன. அதில் யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல் மிக மிக பிரமாண்டமானது.

222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் உடைய இந்த உளவு கப்பலில் அதி நவீன விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்ணில் பறக்கும் செயற்கை கோள்களை இந்த உளவு கப்பலால் ஆய்வு செய்ய முடியும்.

ஏவுகணைகள் ஏவப்படுவதையும், அந்த ஏவுகணைகளின் ஆற்றலையும் இந்த உளவு கப்பலால் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இருந்த இடத்தில் இருந்தே 750 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களை ஆய்வு செய்யும் திறனும் இந்த உளவு கப்பலுக்கு இருக்கிறது. கடந்த மாதம் 14-ந்தேதி இந்த உளவு கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டது.

எரிபொருள் நிரப்பவும், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளவும் இந்த கப்பல் கடந்த 11-ந் தேதி இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரத் திட்டமிட்டு இருந்தது. இந்த உளவு கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தால் தென் இந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது. அமெரிக்காவும் இதே கருத்தை வெளியிட்டது.

இதையடுத்து யுவான் வாங்-5 உளவு கப்பலுக்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக உளவு கப்பல் வருகையை ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் சீனா இதை ஏற்கவில்லை.

இலங்கையின் தென் புறத்தில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா எடுத்திருக்கிறது. எனவே அந்த துறைமுகத்துக்குத்தான் வரப்போவதாக சீனா ராணுவம் அறிவித்தது. மேலும் இலங்கை உள் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் பிடிவாதம் காரணமாக இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே சிங்கள தலைவர்களுடன் ஆலோசித்தார். அதன் பிறகு சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கடந்த சனிக்கிழமை இலங்கை அறிவித்தது. அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி அளித்திருப்பதாக இலங்கை விளக்கம் அளித்தது.

என்றாலும், இலங்கையின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகுந்த கவலையை கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடும் சர்ச்சைக்கு மத்தியில் யுவான் வாங்-5 உளவு கப்பல் கடந்த 2 நாட்களாக இலங்கை நோக்கிய பயணத்தை தீவிரப்படுத்தியது. நேற்று இரவு அது இலங்கையை நெருங்கியது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.20 மணிக்கு யுவான் வாங்-5 உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இன்று முதல் 22-ந்தேதி வரை 7 நாட்களுக்கு அந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டு நிலை கொண்டிருக்கும்.

ஏற்கனவே கொழும்பு துறைமுகத்துக்கு பாகிஸ்தான் கடற்படையின் தைமூர் கப்பல் வந்திருந்தது. இந்த கப்பலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் கப்பல்தான். கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்ட பிறகு இந்த கப்பல் நேற்று கராச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் சீன உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திருக்கிறது.

சீன உளவு கப்பல் எந்த கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று இலங்கை தெரிவித்து இருந்தாலும், அந்த உளவு கப்பல் தென் இந்திய பகுதிகளை கண்காணிக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த உளவு கப்பல் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டபோது, இலங்கைக்கும் சீன ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் போது என்னென்ன பேசப்பட்டது என்ற விவரங்களை இரு நாடுகளும் வெளியிட மறுக்கின்றன. இதனால் யுவான் வாங்-5 உளவு கப்பல் நடவடிக்கைகள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கின்றன. அதனால் இந்த கப்பலால் தென் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது என்று ராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சீன உளவு கப்பலுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகமும், சிங்கள அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதுவும் இந்தியா, அமெரிக்காவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த 7 நாட்களும் அந்த கப்பலின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க இந்தியா ஏற்பாடு செய்திருப்பதாக தெரிகிறது.

என்றாலும், யுவான் வாங்-5 உளவு கப்பல் தனது அதிநவீன கருவிகள் மூலம் உளவு பார்ப்பதை தீவிரப்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தென் இந்தியாவில் உள்ள 6 கடற்படை தளங்களை இந்த உளவு கப்பலால் படம் பிடிக்க முடியும். அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் 2 இடத்திலும் சக்திவாய்ந்த அணுமின் நிலையங்கள் உள்ளன. இந்த அணுமின் நிலையங்களையும் உளவு கப்பலால் பார்க்க முடியும். சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பணிகளையும் அந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும்.

இந்த அச்சுறுத்தல்கள் தவிர விசாகப்பட்டினம், கொச்சி கடற்படை தளங்களையும் அந்த உளவு கப்பல் துல்லியமாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உளவு தகவல்கள் உடனுக்குடன் சீன ராணுவத்துக்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யுவான் வாங்-5 உளவு கப்பலில் சுமார் 2 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருக்கிறது.

என்றாலும், ரகசியமாக வீரர்கள் பரிமாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Tags:    

Similar News