உலகம்

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சீனாவின் முதல் கடற்படை தளம்- இந்திய செயற்கை கோள்களை நேரடியாக கண்காணிக்கும் அபாயம்

Published On 2022-08-19 10:08 GMT   |   Update On 2022-08-19 11:19 GMT
  • இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள சீனாவின் போர்க்கப்பல்களுக்கு உதவியாக இருக்கும்.
  • இந்திய வான்வெளி பரப்பில் உள்ள செயற்கை கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் சீனா தனது ராணுவ தளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

இதன் முதல் கட்டமாக வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடான ஜிபூட்டியில் சீனா கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 4,700 கோடி செலவில் கடற்படை தளத்தை அமைக்கும் பணியை தொடங்கியது. 6 ஆண்டுகளாக நடந்த இந்த பணி தற்போது முடிவடைந்து உள்ளது.

இதையடுத்து இந்த கடற்படை தளம் முழுமையாக செயல்பட தொடங்கி இருக்கிறது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் பலமான கட்டமைப்பை இது கொண்டுள்ளது. எந்தவித நேரடி தாக்குதலையும் தாங்கும் வகையில் இந்த கடற்படைதளம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது சீனாவின் முதல் வெளிநாட்டு ராணுவதளம் ஆகும்.

இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள சீனாவின் போர்க்கப்பல்களுக்கு இது உதவியாக இருக்கும். இதற்கான செயற்கைகோள் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த ஜிபூட்டி கடற்படை தளம் மூலம் சீனா தனது ராணுவ படைகளை நிலை நிறுத்தவும், எதிரி நாடுகளை உளவு பார்க்கவும் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.

இந்திய வான்வெளி பரப்பில் உள்ள செயற்கை கோள்களை சீனா நேரடியாக கண்காணிக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் சீனா முதல் முறையாக வெளிநாட்டில் கடற்படைதளத்தை அமைத்து உள்ளதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

வருங்காலத்தில் உலகம் முழுவதும் நட்பு நாடுகளிலும் தன்னுடைய ராணுவ தளத்தை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டு உள்ளது.

Tags:    

Similar News