உலகம்

கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ தளம் மீது தாக்குதல்?

Published On 2022-08-10 05:25 GMT   |   Update On 2022-08-10 05:25 GMT
  • கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
  • ரஷியாவின் கிரிமியாவில் ராணுவ விமான தளம் உள்ளது.

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போது வரை நீடித்து கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷியாவின் கிரிமியாவில் ராணுவ விமான தளம் உள்ளது. இங்கிருந்து உக்ரை னின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. கிரிமியாவை கடந்த 2014-ம் ஆண்டு ரஷியா தாக்குதல் நடத்தி தன்னுடன் இணைத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிரிமியா வில் உள்ள ரஷ்யாவின் ராணுவ விமான தளத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதனால் அங்கு தீப் பிடித்து எரிந்தது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

ராணுவ தளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதறின.

இதற்கிடையே ரஷியா ராணுவ தளம் மீது உக்ரைனில் இருந்து நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது.

ஆனால் அதை ரஷியா திட்டவட்டமாக மறுத்தது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, "ராணுவ தளத்தில் வெடிமருந்துகள் வெடித்தது. தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. போர் விமானங்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

அதே போல் ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்த வில்லை என்று உக்ரைனும் தெரிவித்தது.

இதற்கிடையே ராணுவ தளத்தில் குண்டுகள் வெடித்ததில் ஒருவர் பலியானார். 8 பேர் காயம் அடைந்தனர் என்று கிரிமியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Similar News