உலகம்

தொழில்நுட்ப கோளாறால் பாதிப்பு- அமெரிக்காவில் 5,400 விமானங்கள் தாமதம்

Published On 2023-01-12 10:14 IST   |   Update On 2023-01-12 10:14:00 IST
  • உள்நாட்டு விமான இயக்கத்தை தாமதப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
  • தீவிர முயற்சிக்கு பிறகு கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பின் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.

அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று திடீரென்று பழுது ஏற்பட்டது.

இதனால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்களை அவசரமாக தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து ஏராளமான விமானங்கள், உள்ளூர் மற்றும் அண்டை விமான நிலையங்களிலும் அவசரமாக தரையிறக்கப்பட்டன. மேலும் நேற்று சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து உள்நாட்டு விமான இயக்கத்தை தாமதப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தீவிர முயற்சிக்கு பிறகு கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பின் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.

இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு டுவிட்டரில் கூறும்போது, 'அமெரிக்கா முழுவதும் வழக்கமான விமான போக்குவரத்து நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டும் தொடங்குகின்றன.

விமானங்களை அவசரமாக தரையிறக்கும் அறிவிப்பு விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. பிரச்சினைக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறோம்' என்று தெரிவித்தது.

சர்வர் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன. இப்பிரச்சினை காரணமாக சுமார் 5,400 விமானங்கள் தாமதமாக சென்றடைந்தன.

இதுதொடர்பாக விமான கண்காணிப்பு இணையதளம் கூறும்போது, 'அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டுக்கு செல்லும் விமானம் அங்கிருந்துவரும் விமானம் என 5,400 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. மேலும் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பயணிகள் பல மணிநேரம் விமான நிலையத்தில் காத்து இருந்தனர். விமான சேவைகள் தொடங்கிய பிறகு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News