பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் - நொடியில் இடிந்து விழுந்த தேவாலயம் - வீடியோ
- ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
- பசிபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்துள்ளதால் பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இரவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போஹோல் மாகாணத்தில் முதல் நிலநடுக்கத்தின் மையம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில் சுமார் 33,000 மக்கள் வசிக்கின்றனர். சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இந்த சூழலில், லெய்ட், செபு மற்றும் பிலிரான் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் உள்ளூர் நிலநடுக்க மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
நிலநடுக்கத்தால் பன்டாயன் பகுதியில் ஒரு தேவாலயம் இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பசிபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்துள்ளதால் பிலிப்பைன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடதக்கது.