இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை: 40 பேர் பலி
- மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன.
- 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு பஸ்சை வெள்ளம் அடித்துச் சென்றது.
தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் பஸ்சை மீட்டு பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதேசமயம் அம்பாறை பகுதியில் கார் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் இறந்தனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மட்டக்களப்பின் தென் கிழக்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. எனவே 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
இதனால் வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது குறித்து அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.