உலகம்

மத நிந்தனை புகார்... பாகிஸ்தானில் காவல் நிலையத்தை சூறையாடி கைதியை அடித்துக் கொன்ற கும்பல்

Published On 2023-02-11 16:14 GMT   |   Update On 2023-02-11 16:14 GMT
  • இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
  • வன்முறை மற்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

லாகூர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நங்கனா சாஹிப் மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை அவமதித்ததாக கூறி வரிஸ் இசா என்பவர் கைது செய்யப்பட்டு, வார்பர்டன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், ஒரு கும்பல் இன்று காவல் நிலையத்தை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், கஸ்டடியில் இருந்த வரிஸ் இசாவை இழுத்துச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனனர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லாகூரில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' வார்பர்டன் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தை ஒரு கும்பல் தாக்கி, புனித நூலை அவமதித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு காவலில் வைத்திருந்த வாரிஸ் இசாவை வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி, தெருவில் இழுத்துச் சென்று அடித்துக் கொன்றனர்' என்றார்.

இரண்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு திரும்பிய அந்த நபர், தனது முன்னாள் மனைவியின் படத்தை புனித நூல்களில் ஒட்டி மாந்திரீகம் செய்தார் என, அப்பகுதி மக்கள் கூறியதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த வன்முறை  தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வன்முறை மற்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.

வன்முறைக் கும்பலைத் தடுக்க காவல்துறை ஏன் தவறிவிட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை உறுதி செய்யும்படி பஞ்சாப் காவல் கண்காணிப்பாளருக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News