உலகம் (World)

ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட போர்க்கப்பல்... 2-ம் உலகப்போரில் நாஜி படைகளால் மூழ்கடிக்கப்பட்டது

Published On 2024-09-13 01:53 GMT   |   Update On 2024-09-13 01:53 GMT
  • தண்ணீர் வறண்டதால் ஆற்றின் ஒருசில பகுதிகள் மணல் மேடுகளாக காட்சியளித்து வருகிறது.
  • ஹங்கேரியின் மொன்சாஸ் நகர் அருகே டனுபே ஆற்றிலும் போர்க்கப்பல்களின் சிதைவுகள் தென்பட்டன.

பெல்கிரேடு:

ஐரோப்பா கண்டத்தின் 2-வது பெரிய ஆறு டனுபே. ஜெர்மனியில் உற்பத்தியாகி 10 நாடுகளில் 3 ஆயிரம் கி.மீ. தூரத்தை கடந்து ருமேனியா அருகே கருங்கடலில் கலக்கிறது.

ஆஸ்திரியா, சுலோவோகியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளின் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக டனுபே விளங்குகிறது. இந்த ஆற்றில் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் மீன்பிடி தொழில், சுற்றுலா போக்குவரத்து ஆகியவற்றிற்கு ஆதாரமாக விளங்கி பல்வேறு நாட்டு பொதுமக்களுக்கு பயனளிக்கிறது.

இந்தநிலையில் ஐரோப்பாவில் கோடை காலம் முடிந்து இலையுதிர் காலம் தொடங்கி உள்ளது. இருப்பினும் அங்குள்ள பல்வேறு நாடுகளில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

மழை பொழிவு இல்லாத வறண்ட வானிலை நிலவுவதால் செர்பியா நாட்டின் குறுக்கே ஓடும் டனுபே ஆற்றில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. செர்பியாவின் பிரோவோ நகர் அருகே டனுபே ஆற்றையொட்டி வாழும் மக்கள் வாழ்க்கை ஆதாரங்களுக்கும் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தண்ணீர் வறண்டதால் ஆற்றின் ஒருசில பகுதிகள் மணல் மேடுகளாக காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில் செர்பியாவில் பிரோவோ நகர் அருகே வற்றிய டனுபே ஆற்றின் நடுவே போர்க்கப்பல் ஒன்று தென்பட்டது.

மேலும் ஹங்கேரியின் மொன்சாஸ் நகர் அருகே டனுபே ஆற்றிலும் போர்க்கப்பல்களின் சிதைவுகள் தென்பட்டன. இவை 2-ம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படையினரால் பயன்படுத்தப்பட்டவை என்றும், ரஷிய படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கப்பல்களை வெடிக்க செய்துவிட்டு அவர்கள் தப்பியதாக வரலாற்று ஆய்வாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News