உலகம்

பிஷப் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு பதவி நீக்கம் - போப் பிரான்சிஸ் அதிரடி

Published On 2023-11-12 10:31 GMT   |   Update On 2023-11-12 10:31 GMT
  • போப் பெனிடிக்ட் அவர்களால் பிஷப் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் ஜோசப்
  • கடவுள் தந்த அடையாளங்களை சிதைக்கப்படுவதாக ஜோசப் குற்றம் சாட்டினார்

சமீப காலமாக, கிறித்துவ மதத்தில் தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பல சட்ட திட்டங்களை மாற்ற போப் பிரான்சிஸ் தீவிரமாக உள்ளார்.

கருக்கலைப்பு, தன்பாலின திருமணம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஞானஸ்நானம் செய்விப்பது போன்றவை குறித்த கிறித்துவ மத சம்பிரதாயங்களில் போப் பிரான்சிஸ் பல மாறுதல்களை கொண்டு வர முயன்று வருகிறார். வாடிகனின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

2012ல் போப் பெனிடிக்ட் அவர்களால் பிஷப் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டு (65). அவர் போப் பிரான்சிஸ் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார்.

கத்தோலிக்க சித்தாந்தம் பல எதிர்ப்புகளை சந்திப்பதை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.

ஆண்'மற்றும் பெண் ஆகிய இருவருக்கிடையே மட்டுமே ஏற்பட வேண்டிய திருமண பந்தத்தை சீர்குலைக்கும் விதமாகவும், கடவுள் கொடுக்கும் அடையாளங்களை சிதைக்கும் விதமாகவும், மாற்ற முடியாதவற்றை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும் ஜோசப் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வாடிகன் விசாரணைகளை நடத்தி, அவரை பதவி விலக வலியுறுத்தியது. ஆனால், இதற்கு உடன்பட ஜோசப் மறுத்து விட்டார்.

இதனை தொடர்ந்து, போப் பிரான்சிஸ், பிஷப் ஜோசப் ஸ்ட்ரிக்லேண்டுவை பதவியிலிருந்து நீக்கி உள்ளார். அவரது நடவடிக்கைகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக, ஆற்றி வந்த பணிகளிலிருந்து முழுவதுமாக ஜோசப் விடுவிக்கப்பட்டுள்ளார் என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News