உலகம்

இம்ரான்கானுக்கு 8 நாள் போலீஸ் காவல்: வன்முறை போராட்டத்தில் 4 பேர் பலி

Published On 2023-05-11 08:13 IST   |   Update On 2023-05-11 08:13:00 IST
  • நாடு முழுவதும் காலவரையின்றி இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
  • லாகூரில் ஷாத்மேன் போலீஸ் நிலையத்தை இம்ரான்கான் கட்சியினர் தாக்கினர்.

இஸ்லாமாபாத் :

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் ஊழல் செய்து, பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக்கூறப்படுகிற அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அவர் கோர்ட்டு வளாகத்தில் இருந்தபோது, துணை ராணுவத்தினர் கைது செய்த விதம் சர்ச்சைக்குள்ளாகி, இது தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விசாரணை நடத்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

இம்ரான்கான் மீதான 2 வழக்குகளை விசாரிப்பதற்காக இஸ்லாமாபாத்தில் போலீஸ் லைன்ஸ் தலைமையக வளாகத்தில் உள்ள புதிய போலீஸ் விருந்தினர் மாளிகையை சிறப்பு கோர்ட்டாக மாற்றி உள்ளனர்.

இந்த ஊழல் தடுப்பு கோர்ட்டு எண்.1-ல் நீதிபதி முகமது பஷீர் முன்னிலையில் இம்ரான்கான் நேற்று பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து சாலைகளிலும் தடைகளை ஏற்படுத்தி, மற்றவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நீதிபதி முகமது பஷீர்தான் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீபையும், அவரது மகள் மரியம் நவாஸ்சையும் ஊழல் வழக்கில் தண்டித்தவர். மரியம் நவாஸ்சை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விடுதலை செய்து விட்டது. ஆனால் நவாஸ் ஷெரீப் ஆஜராகாததால் அவரது மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இம்ரான்கான் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு போலீஸ் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, இம்ரான்கானிடம் விசாரணை நடத்துவதற்கு 14 நாட்கள் ஊழல் தடுப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.

ஆனால் இம்ரான்கான் வக்கீல், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு எனக் கூறி, இம்ரான்கானை விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பஷீர், இம்ரான்கானை 8 நாட்கள் ஊழல் தடுப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மற்றொரு ஊழல் வழக்கில் (தோஷாகானா வழக்கு) கூடுதல் மற்றும் மாவட்ட செசன்ஸ் நீதிபதி ஹுமாயூன் திலாவர், இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தார்.

இந்த வழக்கு, இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, வெளிநாடுகளில் இருந்து கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளை 'தோஷாகானா'வில் (அரசு காப்பகம்) ஒப்படைக்கப்பட்டிருந்ததைப் பெற்று, அதிக விலைக்கு விற்றதை மறைத்து விட்டது தொடர்பானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே இம்ரான்கான் கைதைக் கண்டித்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் தொடர்ந்து வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது பல நகரங்களுக்கும் பரவி வருகிறது. நாடு முழுவதும் காலவரையின்றி இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் போலீஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களைவும் வீசுவதாகவும், மரங்களையும், அரசு சொத்துகளையும் தீ வைத்து கொளுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெஷாவரில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கும், ஆம்புலன்ஸ் ஒன்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அங்கு நடந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 1 டஜனுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் உடல்கள் லேடிரீடிங் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைகள் தொடர்பாக அங்கு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கராச்சியில் அரங்கேறிய வன்முறையில் 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தில் கலவரங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துங்குவா மாகாணத்திலும் ராணுவத்தை அனுப்புமாறு பாகிஸ்தான் அரசைக் கேட்டுள்ளனர்.

லாகூரில் ஷாத்மேன் போலீஸ் நிலையத்தை இம்ரான்கான் கட்சியினர் தாக்கினர். போராட்டக்காரர்கள் லாரியில் வந்து இந்த தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News