செய்திகள்
துபாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப் அபூர்வ நோயால் பாதிப்பு - துபாய் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2019-03-19 03:16 GMT   |   Update On 2019-03-19 03:16 GMT
அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். #PervezMusharraf
துபாய்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறி மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு லண்டன் நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ‘அமைலாடோசிஸ்’ என்ற அபூர்வ நோய் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். மருத்துவ சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.



துபாயில் உள்ள தனது வீட்டில் மு‌‌ஷரப் ஓய்வு எடுத்து வந்தார். இந்த அபூர்வ நோயால் அவர் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். ‘அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது அவருக்கு ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்பத்திரியின் பெயர் வெளியிடப்படவில்லை. தற்போது அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் அப்சல் சித்திகி தெரிவித்துள்ளார். #PervezMusharraf
Tags:    

Similar News