செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவிலை அடித்து நொறுக்கி தீ வைத்த மர்ம நபர்கள்

Published On 2019-02-06 10:22 GMT   |   Update On 2019-02-06 10:22 GMT
பாகிஸ்தானில் பிரசித்தி பெற்ற இந்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலை அடித்து நொறுக்கி தீ வைத்து சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Hindutemplevendalised
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலை  சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த  புனித நூல்களுக்கும், சிலைகளுக்கும் தீ வைத்தனர். இச்சம்பவம் கைர்புர் மாவட்டத்தில் உள்ள கும்ப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்கள் குரானின் போதனைகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

கோவிலை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த கோவில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருப்பதால், பாதுகாப்புக்கு யாரையும் நியமிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதியில் உள்ள இந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பாகிஸ்தான் இந்து கவுன்சில் ஆலோசகர் ராஜேஷ் குமார் ஹர்தாசனி கூறுகையில், இந்து கோவில்களின் பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இந்த தாக்குதல்கள்  இந்து சமூகத்தின் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மத நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன எனவும் கூறினார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் 220 மில்லியன் மக்களில், 2 சதவீதம் இந்து மக்கள் வாழ்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்தில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. #Hindutemplevendalised

Tags:    

Similar News