செய்திகள்

பிரேசில் அணை உடைப்பில் பலி 40 ஆக உயர்வு - ஐ.நா. பொதுச்செயலாளர் இரங்கல்

Published On 2019-01-27 12:42 GMT   |   Update On 2019-01-27 12:42 GMT
பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தின் அருகே அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன 300 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #Brazildamcollapse #BrazildamcollapseToll
பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் புரு மாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணைக்கட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 

அப்போது திடீரென அந்த அணை உடைந்தது. உடனே அணையில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது.

இச்சம்பவத்தில் இரும்புதாது சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த மற்ற பணியாளர்களை மீட்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில் மீட்புப் பணிகளில் உதவி செய்வதற்காக இஸ்ரேல் நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில் அதிபர் ஜைர் மோல்சோனாரோ ஹெலிகாப்டர் மூலம் சென்று விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட்டார்.

இன்று மாலை நிலவரப்படி இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன சுமார் 300 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கோர விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், ரஷியா பிரதமர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Brazildamcollapse #BrazildamcollapseToll 
Tags:    

Similar News