செய்திகள்

அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Published On 2018-11-09 19:03 GMT   |   Update On 2018-11-09 19:03 GMT
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். #California #Wildfire
வாஷிங்டன்:

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கேம்ப் கிரீக் என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத்தீயானது கொளுந்து விட்டு எரிகிறது. மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் சில மணி நேரத்திலேயே (நேற்று முன்தினம் மதியம் வரை) 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி விட்டது. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது.

இந்த காட்டுத்தீ திடீரென பரவியதால் பலர் வாகனங்களையெல்லாம் சாலைகளில் போட்டு விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பல வீடுகள் தீக்கிரையாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.



தீ பரவி வருகிற பகுதிகளில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அங்கு பாரடைஸ், மகாலியா, கான்கவ், பட்டி கிரீக் கேனியான், பட்டி வேலி பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுமாறு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி சிலர் உயிரிழந்து விட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. தீயை அணைப்பதற்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர்.

தீ பரவி வருகிற பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் நெருக்கடி கால பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கேயுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர்.  #California #Wildfire 
Tags:    

Similar News