செய்திகள்

பிரேசில் தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றம் - இஸ்ரேல் பிரதமர் வரவேற்பு

Published On 2018-11-02 00:58 GMT   |   Update On 2018-11-02 00:58 GMT
இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார். #Jerusalem #BenjaminNetanyahu
ரியோ டி ஜெனிரோ:

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.
 
எனினும் அவற்றை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த மே மாதம் திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா, பராகுவே நாட்டின் தூதரகங்கள் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.



இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற முடிவு செய்த பிரேசில் நாட்டின் முடிவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக, பிரேசிலில் நடந்த அதிபர் தேர்தலில் புதிய அதிபராக தேர்வான ஜயிர் போல்ஸ்னோரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள பிரேசில் தூதரகம் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபரின் இந்த முடிவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார். #Jerusalem #BenjaminNetanyahu
Tags:    

Similar News