செய்திகள்

இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புதிய கட்சி தொடங்கினார்

Published On 2018-10-24 10:07 GMT   |   Update On 2018-10-24 10:32 GMT
இலங்கை வடக்கு மாகாணத்தின் முதல் மந்திரியாக தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நேற்று நிறைவுசெய்த விக்னேஸ்வரன் இன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை தொடங்கினார். #Wigneswaranresigns #newTamilalliance
கொழும்பு:

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் சார்பில் வடக்கு மாகாணத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்த சி.வி. விக்னேஸ்வரனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்தது.

தனது பதவியின் இறுதி நாளான நேற்று வடக்கு மாகாண சபையில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் மீது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள  தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டி இருந்தார்.

அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் தலைமையிலான அரசு முந்தைய அரசுகளுக்கு எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல என்று குறிப்பிட்ட அவர், தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிசேனா நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்னும் தமிழர்களின் கோரிக்கைக்கு சிறிசேனாவின் அரசு செவி சாய்க்கவில்லை. மேலும், தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியில் இருந்து இன்று விலகிய விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை  தொடங்கியுள்ளார். இதர தமிழர் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளுக்காக தனது தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி பாடுபடும் என்று உறுதியளித்துள்ளார். #Wigneswaranresigns  #WigneswarannewTamilalliance #newTamilalliance
Tags:    

Similar News