செய்திகள்

நான் இந்தியாவை நேசிக்கிறேன், எனது நண்பர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் - சுஷ்மா சுவராஜிடம் கூறிய டிரம்ப்

Published On 2018-09-25 00:55 GMT   |   Update On 2018-09-25 00:55 GMT
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் போது வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் எனது நண்பர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். #UNGA2018 #SushmaSwaraj #DonaldTrump
நியூயார்க் :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், இன்று துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார்.  இந்த நிலையில், உலக போதை பொருள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம் ஒன்று டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்தது.

இந்த கூட்ட முடிவில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே சுவராஜை கட்டி பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.  அதன்பின் டிரம்பிடம் சுஷ்மாவை அறிமுகப்படுத்தினார்.

அதன்பின் சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பினை பெற்று வந்துள்ளேன் என டிரம்பிடம் கூறினார்.  இதற்கு டிரம்ப், நான் இந்தியாவை நேசிக்கிறேன். எனது நண்பர் பிரதமர் மோடிக்கு என் அன்பினை தெரிவியுங்கள் என சுஷ்மா சுவராஜிடம் கூறினார். #UNGA2018 #SushmaSwaraj #DonaldTrump
Tags:    

Similar News