செய்திகள்

அமெரிக்காவில் வீடியோ கேமில் தோல்வியடைந்த விரக்தியில் துப்பாக்கி சூடு - 4 பேர் பலி

Published On 2018-08-26 21:34 GMT   |   Update On 2018-08-27 02:48 GMT
அமெரிக்காவில் நடைபெற்ற வீடியோ கேம் விளையாட்டு தொடரில் தோல்வியடைந்த நபர், விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Jacksonvilleshooting
வாஷிங்டன் :

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ஜாக்சன்வில் நகர் அமைந்துள்ளது. மதுபான விடுதிகள் அதிகம் உள்ள இந்நகரில் வார விடுமுறை தினங்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதைப்போல அந்நகரில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் இன்று வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றன. இந்த கேம் விளையாட்டில், பல்வேறு நபர்கள் போட்டியாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இரண்டு பேர் கேம் விளையாடுகின்றனர் அப்போது பின்னால் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அதைத்தொடர்ந்து மக்கள் பீதியில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், ’கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர், தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்’ என தெரிவித்தார்.

கேம் விளையாட்டில் பங்கேற்ற டிரினி ஜோகா எனும் நபர், ’என் கட்டை விரலில் குண்டு பாய்ந்துள்ளது, நான் மிகவும் அதிர்ஷ்டசாலி’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



புலோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. #Jacksonvilleshooting
Tags:    

Similar News