செய்திகள்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு- சாதித்து காட்டிய கடற்படைக்கு குவியும் பாராட்டுக்கள்

Published On 2018-07-10 12:30 GMT   |   Update On 2018-07-11 13:29 GMT
தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மீட்பு பணியை கச்சிதமாக செய்து முடித்த கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue
பாங்காக்:

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டது. ஆனால் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மிகுந்த பசியுடன் சோர்வாக இருந்ததால் அவர்களுக்கு முதலில் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. பின்னர் அவர்களை வெளியே கொண்டு வரும் வழிமுறைகளை மீட்புக்குழுவினர் ஆராய்ந்தனர்.

திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்திருந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை உடனே வெளியே கொண்டு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் நிதானமாக பணியை தொடங்கினர்.

கடும் சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணியின்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின்னர் மழை எச்சரிக்கைக்கு மத்தியிலும் துரிதமாக மீட்பு பணியை மேற்கொண்ட குழுவினர், இரண்டு கட்டங்களாக 8 சிறுவர்களை மீட்டனர்.


இந்நிலையில், இன்று மூன்றாவது கட்ட மீட்பு பணியின்போது மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு குகைக்கு வெளியே அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது. கடும் சவால்களைக் கடந்து அனைவரையும் மீட்ட கடற்படை வீரர்களை பலரும் பாராட்டி உள்ளனர். #ThaiCaveRescue #Thailandcave #ThailandCaveKids #ThaiNavySEAL
Tags:    

Similar News