செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைதாகிறார்

Published On 2018-06-21 06:17 GMT   |   Update On 2018-06-21 06:17 GMT
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடந்து வருவதால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மலேசியாவில் நிலவுகிறது.
கோலாலம்பூர்:

மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார்.

தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இப்போது இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாக பிரதமர் மகாதீர் முகமது கூறி இருக்கிறார். மேலும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமர் மகாதீர் முகமது கூறினார்.

எனவே, ஊழல் குற்றச்சாட்டில் நஜீப் ரசாக் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மலேசியாவில் நிலவுகிறது.
Tags:    

Similar News