செய்திகள்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் பரபரப்பு: முன்னாள் பிரதமர் அப்பாசி, இம்ரான்கான் நேரடி மோதல்?

Published On 2018-06-10 23:27 GMT   |   Update On 2018-06-10 23:27 GMT
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானை எதிர்த்து அப்பாசி போட்டியிடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #PakistanGeneralElection
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி நாடாளுமன்ற தேர்தலும், பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாசி, முர்ரே, கோட்லி, சட்டியன், ககுட்டா பகுதிகளை உள்ளடக்கிய அட்டாக் நாடாளுமன்ற தொகுதியில் (என்.ஏ.57) இருந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.



ஆனால் இந்த முறை அவர் இஸ்லாமாபாத் தொகுதியில் (என்.ஏ.53) போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் அங்கு ஏற்ற நபர் இல்லை என்று அந்தக் கட்சி கருதுகிறது.

எனவே இம்ரான்கானை எதிர்த்து அப்பாசி போட்டியிடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் இது குறித்து கட்சி தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன. 
Tags:    

Similar News