செய்திகள்

தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா அடாவடி

Published On 2018-05-19 14:10 IST   |   Update On 2018-05-19 14:10:00 IST
பல நாடுகள் உரிமை கோரிவரும் தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. # SChinaSea #Chinaairforce
பீஜிங்:

சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆனால், ‘‘தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’’ என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டில் இந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குட்பட்ட ஒரு தீவில் சான்ஷா என்ற மாதிரி நகரத்தை சீனா உருவாக்கியது.

இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக தி ஹேக் நகரில் ஐ.நா. சட்டதிட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான மத்தியஸ்தம் செய்வதற்கான நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ், 2013-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது.

தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறிவிட்டது.

இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை நேற்று இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.



தென் சீனக்கடல் எல்லைக்குட்பட்ட தீவுகள் மற்றும் பவளப்பாறைகள் பகுதிகளில் H-6K ரகத்தை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்களின் மூலம் நடைபெற்ற இந்த போர் பயிற்சியின் மூலம் கடல் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #SChinaSea #Chinaairforce 
Tags:    

Similar News